செஞ்சியையும்,செஞ்சிக் கோட்டையையும் தமிழ்நாட்டில் அனைவரும் நன்றாக அறிவர். அது வரலாற்று முக்கியத்துவம் பெற்ற ஒர் இடமாகும். இது தென்னார்க்காடு மாவட்டத்தில் திண்டிவனத்திலிருந்து¬ 25கிலோ மீட்டர் தூரத்தில் திருவண்ணாமலை செல்லும் பாதையில் அமைந்துளளது. செஞ்சிக்கு கிழக்கே செஞ்சியாறு என்னும் வராக நதி ஓடுகிறது. செஞ்சியில் ஆனந்தகிரி, கிருஷ்ணகிரி, சந்திராயன்துர்க்கம் என்னும் மூன்று மலைகள் உள்ளன. இவைகளைச் சுற்றி கருங்கற்களால் மதிற்சுவர் எழுப்பப்பட்டிருக்கிற¬து. இம்மதிர்சுவர்கள் 18 மீட்டர் அகலமும், 6 மீட்டர்உயரமும் கொண்டுள்ளன. ஆனந்தகிரியின் உச்சியிலும் கிருஷ்ணகிரியின் உச்சியிலும் கோட்டைகள் கட்டப்பட்டுள்ளன. இக்கோட்டையை சுமார் 24 மீட்டர் அகலமுள்ள அகழியால் சூழ்ந்துள்ளது.
செஞ்சி என்ற சொல் எப்படி வந்தது என்பது குறித்துப் பல செய்திகள் சொல்லப்படுகின்றன. இராமயணத்தில் மூர்ச்சித்து வீழ்ந்த வானர சேனையினை எழுப்புவதற்காக அனுமான் சஞ்சீவி பர்வதத்தை எடுத்துக் கொண்டு வந்த பொழுது இங்கு சிறிது விழுந்ததால் ஏற்பட்ட பெயர் என்பது ஒன்று. அங்கு கிராமத்திலுள்ள செஞ்சியம்மன் என்பவள் கிராமத் தேவதையாய் இருந்து வந்தாள். அவளைக் கிராமத்தவர்கள் வழிபட்டு வந்தார்கள். அது நடுக்குன்றின் அருகில் இருந்தமயால் அதைச் சார்ந்த கிராமம் செஞ்சியம்மன் கோட்டை என மாறி இப்பொழுது செஞ்சியென வழங்கப்படுகிறது என்பது மற்றொன்று. ஆனந்தகிரி இப்பொழுது இராசகிரி என்று வழங்கப்படுகிறது. இதன் உயரம் சுமார் 240 மீட்டர். மூன்று குன்றுகளில் இதுவே உயரமானது. இதன் உச்சியில் கோட்டையையும், அரங்கநாதர் கோவிலும், தானியக்கிடங்குகளும், மருந்துகிடங்கும், மணி கூண்டும்,பீரங்கி அமைந்த மண்டபமும், வறறாத நீர் நிறைந்த சுனையும் உள்ளன. இதன் அடியில் கோட்டை ஒன்று கட்டப்பட்டுளளது. இதற்கு 'உட்கோட்டை' என்பது பெயர். இந்த உட்கோட்டையின் தெற்கே சக்கரக்குளமும், செட்டிக்குளமும் உள்ளன. இவ்வுட்கோட்டையில் தானியக் களஞ்சியங்களும், சிலம்பப் பயிற்சிக் கூடமும், நீராடும் இடங்களும், போர் வீரர்கள் தங்கி இருந்த இடங்களும் காணப்படுகின்றன. அவற்றையடுத்துக் கல்யாண மகால் உள்ளது. அது பல அடுக்குகளைக் கொண்டது; சுமார் 24மீட்டர் உயரமுள்ளது. அம்மலைகளை சுற்றிப் பல அறைகள் உள்ளன.கிருஷ்ணகிரியின் உச்சியில் தானியக் களஞ்சியங்களும்,கொலு மண்டபமும், நிர்சுனையும்,கோபாலசுவாமி கோவிலும் உள்ளன. இதற்கு மேலே செல்வதற்குப் படிகள் உள்ளன. சந்திராயன் துர்க்கத்தின் உச்சியில் ஒரு கோட்டை உள்ளது.அதன் மேற்பாகத்தை யொட்டி வெங்கடரமணசுவாமி கோவில் உள்ளது. கிழே உட்கோட்டை அருகில் உல்லாகான் மசூதி இருக்கிறது. இவையனைத்தும். சரித்திரப் புகழ் பெற்ற இடங்களாகும். இப்பொழுது மத்திய அரசால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
செஞ்சிகொட்டையின் வரலாறும், செஞ்சிக் கோட்டை பிறந்த கதையும் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. வரலாற்றிலும் பெரும்பாலும் 14ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் காலத்திலும், பின்னர் முகமதியர் காலத்திலும், அதன் பின் பிரஞ்சுக்காரர் ஆதிக்கத்திலும் செஞ்சியைப் பற்றிய செய்திகள் ஓரளவு காணப்படுகின்றன. அனால், செஞ்சி நாட்டினை நிறுவிச் செஞ்சிக்கொட்டைக் கட்டி, பல ஆண்டுகள் யாதவ மன்னர்கள் ஆண்டு வந்தார்கள் என்பது பலருக்குத் தெரியாது. வரலாறுகளிலும் இச்செய்தி அதிகமாகக் காணக்கிடைக்கவில்லை. கிபி.முதலாம் நூற்றாண்டில், அதாவது, கிபி.907 முதல் கிபி.1031 வரை சோழப் பேரரசு உச்ச நிலையில் இருந்த காலம். இராஜராஜா சோழன் தமையன் ஆதித்திய சோழன் வரலாற்றிலும் செஞ்சி சிங்கபுர நாடு என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கிறது.
கிபி.13 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு சோழர்கள் ஆட்சி குன்றியபின், சிங்கபுரநாடு பாண்டியர் ஆட்சியிலும், பல்லவர் ஆட்சியிலும் இருந்ததெனக் கல்வெட்டுகளும், வரலாறுகளும் குறிப்பிடப்படுகின்றன. இந்தக் காலத்திலே தான் செஞ்சி தனி நாடாய்த் தோன்றியிருக்க வேண்டுமெனக் கருதப்படுகிறது. செஞ்சியை ஆண்ட முதல் மன்னன் ஆனந்தக்கோன். அவனது பரம்பரையில் வந்த நாராயணன் என்பவன் செஞ்சியின் செஞ்சியின் இருநூறு ஆண்டுகால வரலாறு பற்றி எழுதியுள்ளது தெரிகிறது. அதில் செஞ்சியைத் தோற்றுவித்த விபரமும் காணப் படுகின்றது. ( இது மெகானிஸ் ஏட்டில், ‘கர்நாடக ராஜாக்களின் சவிஸ்தார சரிதம்’ என்பதில் எழுதப்பட்டிருக்கிறது.)
இதில் உள்ள விபரப்படி செஞ்சிக் கோட்டையும், செஞ்சி நாடும் கிபி.1200 இல் தோற்றுவிக்கப்பட்டன என்று தெரிகிறது. இவற்றின் தோற்றம் குறித்து வேறு ஒரு கதையும் சொல்லப்படுகிறது.
ஆனந்தக்கோன்(கிபி.1190-1240)
ஆனந்தக்கோன் என்பவன் செஞ்சி என்ற சிற்றூரில் ஆடுகளை மேய்க்கும் இடைச்சிறுவன். அவன் தினமும் காடுகளில் ஆடுகளை மேய்த்து வருவது வழக்கம். அவ்வாறு ஆடுகளை மேய்த்து வரும்பொழுது ஒருநாள் சாமியார் ஒருவரை சந்திக்க நேரிட்டது. அந்தச் சாமியார் எல்லாப் பொருள்களையும் தங்கமாக மாற்றும் மூலிகையை ஓன்றினை தேடிக் கொண்டிருந்தார். பையனைக் கண்டதும் மூலிகையை மட்டும் காட்டி, அதன் தன்மையை சொல்லாமல், அதுபோன்ற மூலிகைகளை சேகரிக்க உதவும் படி அவனை வேண்டிக் கொண்டார். பின்னர் தினமும் இருபவரும் அந்த மூலிகைகளை எடுத்து வந்து ஓரிடத்தில் சேர்த்தனர். மூலிகையும் நிரம்பச் சேர்ந்தது. மூலிகை நன்கு காய்ந்து சருகாகியது. ஒருநாள் சாமியார் ஏதோ பூஜை செய்து அந்த மூலிகைக் குவியலைக் கொளுத்தினார். அது எரிந்துக் கொண்டிருக்கும்பொழுது ஆனந்தகோனைப் பிடித்து அதில் தள்ள முயன்றார். ஆனால் பையன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள சாமியரையே அந்தத் தீயில் தள்ளிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டான். மறுநாள் ஆடுகளை ஓட்டிக்கொண்டு அந்த இடத்திற்கு வந்து பார்த்தான். சாமியார் உருவம் விரைத்த நிலையில் தங்கம் போல் ஓளி வீசிக் கொண்டிருப்பதைப் பார்த்தான். பிறகு அதைத் தூக்கிச்சென்று அருகில் இருந்த ஒரு குகையில் ஓளித்து வைத்துவிட்டு அதிலிருந்து சிறிது வெட்டி எடுத்துக் கொண்டு ஊர் வந்து சேர்ந்தான். அதை பொற்கொல்லனிடம் காட்டினான். பொற்கொல்லன் அது அசல் தங்கம் என்று சொன்னான். அதன்பின் ஆனந்தக்கோன் அவ்வளவுத் தங்கத்தையும் பணமாக்கினான். தென்பகுதியில் உள்ள மலையில் கோட்டை ஓன்றினைக் கட்டினான். அந்த மலைக்கு ‘ஆனந்தகிரி’ என்று பெயர் சூட்டினான். இதுவே அந்த கதை.
வரலாற்றில் ஆனந்தக்கோன் என்ற இடைச்சிறுவன் குகையில் கிடைத்த புதையலைக் கொண்டு செஞ்சி நாட்டினை நிறுவி, செஞ்சிக் கோட்டையைக் கட்டிய செய்தி தெரியவருகிறது. ஆகையால் கதையில் காணும் விபரமும், வரலாறு சொல்லும் விபரமும் ஏறக்குறைய ஓன்றாகத் தெரிகிறது.
சுமார் கிபி.1200 இல் ‘ஆனந்தக்கோன்’ என்ற இடைச்சிறுவன் ஆடுகளை காட்டில் மேய்த்து வரும்பொழுது குகையில் புதையல் ஓன்றினைக் கண்டான். அப்பணத்தை வைத்துக்கொண்டு சிறு படையைத் திரட்டி அருகிலிருந்த தேவனூர், சிங்கவரம், செயங்கொண்டான், சீனச்சேரி முதலிய ஊர்களிலிருந்த தலைவர்களை வென்று, எல்லாவற்றையும் ஓன்று சேர்த்து செஞ்சி நாட்டை நிறுவினான். பின்னர் செஞ்சியின் தென்பக்கத்திலிருந்த குன்றில், கோட்டை ஒன்றைக் கட்டி, அதற்குத் தன் பெயரிலேயே, ‘ஆனந்தகிரி’ என்று பெயரிட்டான். ஆனந்தக்கோன் செஞ்சி நாட்டினைச் சுமார் 60ஆண்டுக்காலம் ஆண்டான் என்று தெரிகிறது.
No comments:
Post a Comment